அண்ணல் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் தொங்கும் பூங்கா எதிரே உள்ள அம்பேத்காரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு சேலம் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர். 



அதன்பின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்கள் அனைவருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றார். 



அதன்பின் பல்வேறு அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக வருகை தந்து அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் அனுமதித்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் "பாரத் மாதாகீ ஜே" என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் "ஜெய்பீம் வாழ்க" என எதிரெதிர் மூலகங்களை எழுப்பியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அஸ்தம்பட்டி பிரதான சாலையில் பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர். அதன் பின்னர் தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 14) சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடப்பட வேண்டும் என்றார். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறுதி மொழியை வாசிக்க அரசு ஊழியர்கள் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.