தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி அறையில் வைக்கப்பட்டிருந்த 5 கணினிகள் மற்றும் அதைச்சார்ந்த உபயோகபொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு நியாஸ் என்பவரின் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட செல்போனை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், செல்போன் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள தமாணிகோம்பையை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கடையில் திருடிய 4000 ரொக்கம், 1500 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அவரிடம் விசாரித்ததில் தன்னுடன் படிக்கும் மேலும் இரண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பாப்பிரெட்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 5 கணிணி மற்றும் உபகரணங்களை திருடியது தெரியவந்தது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பாக்கெட் மணி வைத்து ஜாலியாக சுற்ற வேண்டும் என்பதற்காக ஒரே மலை கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஒன்றிணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அரசு பள்ளியில் கணினியை திருடி விற்க முயன்ற நிலையில், கணிணி பழைய மாடல் என்பதால், யாரும் வாங்க முன்வராத காரணத்தால் தங்களது வீட்டில் வைத்துள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.