தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வடகரை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 110 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 23 ஆம் தேதியில் பள்ளி மேலாண்மை குழு தேர்வு நடைபெற்றது. அப்போது இப்பள்ளியில், பள்ளி உறுப்பினர் பதவிக்கு பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் போட்டியிட வேண்டாம், உங்களை நாடி நாங்கள் வரத் தேவையில்லை என அப்பகுதியை வேறு சமூகத்தினர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், தங்களுக்கு தனியாக பள்ளியை வழங்க வேண்டும். வேறு சமூகம் இருக்கும் கிராமத்தில் பள்ளி இருப்பதால், அடிக்கடி சாதி பெயரை சொல்லி இழிவாக பேசும் சம்பவங்கள் நடைபெறுகிறது என கூறி, அரசு பள்ளி வளாகத்தில், பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் தென்கரைகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சங்கர், வட்டார கல்வி அலுவலர் ரேணுகாதேவி ஆகியோர் பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது சமாதான பேச்சுவார்த்தை ஏற்க மறுத்த பெற்றோர் தங்களுக்கு தனி பள்ளிக்கூடம் வேண்டும் என தெரிவித்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அரசின் பார்வைக்கு எடுத்து செல்வதாகவும், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
கெயில் எரிவாயு குழாய் சாலையோரம் பதிக்க கோரி விவசாயிகள் கோரிக்கை மனு
இந்திய மத்திய அரசின் கெயில் நிறுவனம் எரிகாற்று குழாய் திட்டத்தை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக செயல்படுத்துவதற்கு, கடந்த 12 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறது. தொடர்ந்து கெயில் எரிவாயு குழாயை விவசாய நிலங்களின் வழியாக பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13.04.2022 அன்று தருமபுரி மாவட்டம், காரியப்பனஹள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர் நிலத்தை காப்பாற்றக்கோரி நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் 7 மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்டட்டோர் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது, கெயில் எரிகாற்றுக்குழாய் திட்டத்தை 7 மாவட்டங்களிலும் சாலையோரம் மட்டுமே அமைக்க உத்தரவிட்டும், நில உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த கணேசன் அவர்களுக்கு குடும்பத்திற்கு, அரசு ரூ.5 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கணேசன் உயிர்துறப்பிற்கு காரணமான கெயில் நிறுவனம், கணேசன் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடாக அளிக்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், கெயில் எரிவாயு குழாய் சாலையோரம் கூட பதிக்க விடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.