தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினரை தாக்கி வாகனங்களை சேதப்படுத்திய, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர், போலி காவலர் அடையாள அட்டை வைத்திருந்தவர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களை தணிக்கை செய்ய ஹைவே பெட்ரோல் வாகனம் மூலம் காவல் துறையினர் தணிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி பகுதியில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் காரிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சௌந்தரராஜன் மற்றும் காவலர்கள் அருண்குமார் வெங்கடேசன் ஆகிய மூவரும் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



 

அப்பொழுது தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதனைக் கண்ட உதவி காவல் ஆய்வாளர் சௌந்தர்ராஜன் அவர்களிடம் சென்று விசாரணை செய்துள்ளார். அப்பொழுது முருகன் என்பவர் தான் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுவதாகவும், அனைவரும் அரசு ஊழியர்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து நால்வரையும் எச்சரித்த உதவி காவல் ஆய்வாளர் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை வாகனத்திற்கு செல்லும் பொழுது, நால்வரும் உதவி காவல் ஆய்வாளரை மீண்டும் அழைத்துள்ளனர்.



அப்பொழுது மதுபோதையில் இருந்த நால்வரும் உதவி காவல் ஆய்வாளர் சவுந்தரராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். மேலும் வயதானவர் என்றும் பாராமல் கீழே தள்ளி சட்டையை கிழித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனை அறிந்த  காவல்துறை வாகனத்தில் இருந்த இரண்டு காவலர்களும் வந்து கேட்டபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டில்களை கையில் எடுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் தான் ஆயுதப்படை காவலர் என்று அடையாள அட்டையை காண்பித்து, எந்த அதிகாரியிடம் பேச வேண்டும் என கூறி மிரட்டி உள்ளார். 



 

இதனால் அச்சமடைந்த காவலர்கள் வாகனத்தில் ஏறி சென்றுள்ளனர். ஆனால் காவல்துறை வாகனத்தை விடாமல் நால்வரும் கற்களைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதில் காவல் துறை வாகனம் முகப்பு விளக்கு போன்றவை சேதமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் சௌந்தர்ராஜன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர் தருமபுரி நகர காவல் துறையினர் நால்வரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முருகன், முனிராஜ், விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகிய நான்கு பேரும் பிடமனேரி பகுதியை சேர்ந்தவர்கள். இதில் முருகன் என்பவர் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள உதவியாளராக பணியாற்றி வருகிறார்.



 

இதில் சந்தோஷ் குமார் என்பவர் ஊர்க்காவல் படையில் இருந்து பல்வேறு புகார் அடிப்படையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலியாக ஆயுதப்படை காவலர் என அடையாள அட்டை வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் இது போன்று மிரட்டி வருவது தெரியவந்துள்ளது.  தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினரை பணியை செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த போலி காவலர் அடையாள அட்டை வைத்திருந்தவர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர்.