கேரள மாநில மக்களின் மிகவும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது திருவோணம். இந்த பண்டிகை கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள கேரள மாநில மக்களால் அந்தந்த மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இன்று சேலத்தில் வசிக்கும் கேரளா மக்கள் புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரளா சமாஜத்தில் ஒன்று கூடிய கேரளா பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோலத்தைச் சுற்றிலும் ஆடி பாடி கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இதுகுறித்து சேலம் வாழ் கேரளா மக்கள் கூறுகையில், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை என்று சேலத்தில் கொண்டாடி வருகிறோம். இங்குள்ள பலரும் தொழிலிற்காகவும், வியாபாரத்திற்காகவும், பெண்கள் திருமணம் ஆகி கணவருக்கு வீட்டிற்கு போன்ற காரணங்களால் கேரளாவில் இருந்து சேலம் வந்தவர்கள். தினசரி வேலைகள் பல இருந்தாலும் கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகையின் போது சேலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் கொண்டாடி வருகிறோம். ஓணம் என்பது மகாபலி சக்கரவர்த்தி ராஜாவாக இருந்தபோது நாட்டில் தீமை எதுவும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் செழிப்புடனும் வாழ்ந்தனர். அவரை நினைவூட்டும் வகையிலும், மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின் போது பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்தப்பூ கோலமிட்டு அதைச் சுற்றி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக கூறினார். இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று அவர்களுடனும் ஓணம் பண்டிகை கொண்டாடி கேரளா உணவு பரிமாறப்படும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் விமர்சையாக கொண்டாடினர். சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவிகள் அனைவரும் கேரளாவில் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு அதனைச் சுற்றி கேரளாவில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து மலையாளத் திரைப்படப் பாடலுக்கு நடனமாடி திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். குறிப்பாக மாணவிகள் தங்களது வீட்டில் இருந்து கேரளாவில் பாரம்பரிய உணவுகளான நெய் புட்டு, தேங்காய் போலி, தேங்காய் பால் பாயாசம் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தங்களுடைய நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.