நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இது சேலம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி என்ற பிரிவின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம் என்பவர் கட்சியில் இருந்து விலகினார். இதேபோல், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் உட்பட 40 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை கோவை நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக அக்கச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.  


தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்குவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



தொடர்ச்சியாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது, நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் முன்னாள் மாவட்ட செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.


இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் முன்னாள் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான வினோத்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காக பல லட்சங்கள் செலவழித்தோம். கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு பேசி வருகிறார். இது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.