தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் இல்லாமல் பெயரளவிற்கு நடைபெற்ற  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் மாதிரி ஒத்திகை நடத்தினர்.

 

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகளிலிருந்து, தங்களை  பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை, தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மாதிரி குறித்து ஒத்திகை நிஙழ்ச்சி நடைபெற்றது. இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அப்பொழுது பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.





 

தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத சமயத்தில் கயிறு மற்றும் தார்பாலின் மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில் விழுந்தால் தற்காத்துக்கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது தலை மற்றும் கைகால் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு கட்டு போடுவது என்ற செயல் வழி விளக்கம் செய்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.  ஆனால் தீயணைப்பு வீரர்களின் இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்ற ஆட்கள் யாரும் இல்லாமலே பெயரளவிற்கு நடைபெற்றது. இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்ற நிலையில் பொதுமக்களுக்காக நடத்தப்படுகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரிடர் மீட்பு துறையினர் பொதுமக்களை அழைக்காமல் பெயரளவிற்கு, குறைந்த அளவு அலுவலர்களை நிறுத்தி செயல் விளக்கங்களை முடித்தனர். வடகிழக்கு பருவமழையில் பாதிப்புகளில் இருக்கும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக நடத்தப்படுகின்ற அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களே யாரும் இல்லாமல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பேரிடர் மீட்பு துறையினர் பொதுமக்களை அழைக்காமல், பெயரளவுக்கு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்துவது எந்த பயனும் இல்லாமல் போகிறது. எனவே பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கும்போது, பெருமளவில் பொதுமக்களை அழைத்து வைத்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.