சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர். அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணையும் விழா ஆத்தூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அதிமுகவை வீழ்த்துவோம் என்று சிலர் சொல்லி வரும் வேளையில் அதிமுகவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கழகத்தில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். திமுக தலைவர், அதிமுக வீழ்ந்துவிட்டது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெறும் என்றார். ஆனால் அதிமுகவை வெற்றிபெறசெய்ய இங்கு மேலும் பலர் வந்துள்ளனர். எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுக சதியை எதிர்கொண்டு எம்ஜிஆர் ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தொண்டர்கள்தான் வாரிசுகள். அதிமுக கட்சி மக்களால் நேசிக்கப்படும் கட்சி என்று பேசினார். அதிமுகவை கண்டால் மற்ற கட்சிகள் அஞ்சுகின்றன. மக்கள் ஆதரவு கொண்ட கட்சி. ஸ்டாலின் அதிமுகவை அழிக்க எடுத்த அவதாரங்களை தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வரும் என்று ஊடகங்கள் கூறுகின்றனர். அப்படிதான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். ஸ்டாலினின் பகல்கனவு பலிக்காது.



திமுகவின் 16 மாத ஆட்சியில் எந்த திட்டமும் தரவில்லை. அதிமுக தந்த திட்டங்களைதான் திறந்து வைக்கின்றனர். லஞ்சம் வாங்குவதில் திமுக முதன்மை அரசாக உள்ளது. கமிஷன், கலெக்சன், கரப்சன் தான் இவர்களின் செயல் என்றார். ஸ்டாலின், தனது கட்சியான திமுகவினரை பார்த்து பயப்படுகிறார். ஸ்டாலின் புயலை சந்தித்தாரா, கொரோனா பாதிப்பை சந்தித்தாரா. தனது கட்சியை பார்த்தே பயப்படுகிறார். நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று கூறியவர், தனது கட்சியினரை பார்த்து கெஞ்சுகிறார். அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றை பார்த்தவர்கள் பயந்து சென்றனர். அதற்கு என்ன மருந்து, எப்படி சிகிச்சை அளிப்பது என்ற நிலையில் அதனை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றினோம். ஒரு நாளைக்கு 7 லட்சம் மக்களுக்கு உணவு அளித்தோம். அவதூறு பரப்பி கழகத்தை அழிக்க நினைத்தால் அது காணல் நீராகதான் ஆகும். அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவி திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம், முதியோர் உதவி தொகை திட்டம் முடக்கிவிட்டனர். ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மா விடாது.



தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவிதொகை என்ன ஆனது. 16 மாதங்களாக ஆய்வு செய்கின்றனர். கல்விக்கடன் தள்ளுபடி, 100 நாள் வேலை திட்டம் நாட்கள் அதிகரிக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட்தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது.ஏழை மாணவர்களின் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு தந்தோம். இதன்மூலம் நடப்பு ஆண்டில் 405 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 110 பேர் பல் மருத்துவம் படிக்கின்றனர். பொறியியல், வேளாண் படிப்பில் 7.5 சத இட ஒதுக்கீடு தர நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். ஆட்சி மாற்றம் காரணமாக அதிமுகவை பார்த்து அதனை செயல்படுத்தி உள்ளது என்று கூறினார்.