கடந்த 40 ஆண்டுகளாக குகைப் பகுதியில் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு  இலவச பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். பூங்கொடி கிராம நரிக்குறவ இன மக்களுக்கு பட்டா, நலத் திட்ட உதவிகள் மற்றும் சாதி சான்றிதழ் வழங்கிய தமிழக முதல்வருக்கு நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.



மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நரிக்குறவர்கள் நல வாரியத்தை ஏற்படுத்தி, அதில் பல ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அப்போது, முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் கருணாநிதி நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்தார். அதற்கும், இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் சென்னை பூங்கொடி கிராமத்தில் குடியிருந்து வரும் நரிக்குறவ இன மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் சென்று மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் இலவச பட்டா மற்றும் சாதி சான்றிதழ் வழங்கினார். இதற்காக நரிக்குறவர் இன மக்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நன்றியை நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் தெரிவித்துக் கொண்டனர்.



இந்த நிலையில் சேலம் குகை பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை உடனடியாக தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என  30 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர். 


இதுகுறித்து நரிக்குறவர் இன நலவாரிய உறுப்பினர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நரிக்குறவர் இன மக்களை பாதுகாக்க எங்களுடைய வாழ்க்கைத்தரம் மேம்பட மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி நரிக்குறவர் இன நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். சேலம் மாவட்டத்தில் சுமார் 206 பேர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்  தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் சென்னை பூங்கொடி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நேரில் சென்று பட்டா மற்றும் சாதி சான்றிதழ் வழங்கினார். அதற்காக, நரிக்குறவர் இன மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குகை பகுதியில் 110 நரிக்குறவர் இன குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம் இதுபோல் எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதாக கூறினார்.