தருமபுரி மாவட்டம் தாதநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவைக்காகவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றுவதற்காகவும், ஓடையின் அருகில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் வறட்சி காலங்களில் அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றி போகவே பயன்பாடு இல்லாமல் போனது. மேலும் ஒரு சில சமூக விரோதிகள் அந்த ஆழ்துளை கிணற்றில் கற்களை கொண்டு மூடியதால் மீண்டும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு புதிய மேல்நிலை நீர் தொட்டி அமைப்பதற்கு ஆணை வந்தவுடன் அதற்காக அந்த மேல்நிலைத் தொட்டியின் அருகிலேயே புதிதாக ஆழ்துளை கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அதிலிருந்து நீரேற்றம் செய்யப்பட்டது. அதனால் கடந்த 15 ஆண்டுகளாகவே வறட்சியல் மூடப்பட்ட ஆழ்துளை கிணறு தொடர்ந்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக இரும்பு மூடியை வைத்து மூடப்பட்டது.



 

அதனை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து  கனமழை பெய்து வந்தது. இதனால் அனைத்து நீரோடைகளில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து திடீரென தண்ணீர் பொங்கி எழுந்து வழிந்தோடுகிறது. இதனால் நிலத்தடி மட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரம் உள்ள இரும்பு தடுப்புகளையும் மீறி தண்ணீர் பீச்சி அடித்து வருகிறது. இந்த தண்ணீர் அருகில் உள்ள நீரோடைகளில் கலந்து அருகில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குட்டைகளில் நிரம்பி வருகிறது. இதனை அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.



 



நீட் தேர்வு விவகாரத்தில் தொலைநோக்கு பார்வை வேண்டும்-தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 562 இடங்கள் கிடைத்தற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்-அரூரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு.

 

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய கே.பி.அன்பழகன் தமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் பிடித்துள்ளது என திமுகவினர் மார்தட்டி கொள்கின்றனர். ஆனால் இது கடந்த 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்டியல். இதற்கு முழுக்க காரணம் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தான்.



 

 மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம், எனக்கூறி திமுகவினர் வாக்குகளை பெற்றனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்காக மாற்று வழியை யோசித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதுதான் தொலைநோக்கு பார்வை. இன்று தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 இட ஒதுக்கீட்டில் 562 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் 62 மாணவர்கள் படிக்க உள்ளனர். இதுக்கு வித்திட்டவர் எடப்பாடி பழனிசாமி தான் என கே பி அன்பழகன் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில்  எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.சிங்காரம், நகர செயலாள பாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.