புதுச்சேரி: பெரியார் பற்றி பேசியதற்கு என்னிடம் சான்று கேட்டு நிற்கும் பெரியார் இயக்கத்தினர், பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக என்ன போராட்டம் நடத்தினார்கள்? திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பது தான் எனது கொள்கை என கட்டமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்: பெரியாரை பற்றி நாங்கள் கூறுவது பொய் என கூறுவது எப்படி? எதற்கு ஆதாரம் தேவை? நாங்கள் தான் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், பக்தி இலக்கியம், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் பற்றி அவர் கூறிய கருத்துகளே போதுமே!.


தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் தான் பெரியார். எந்த மொழியில் அவர் பேசினார்? இந்த மொழியில் தானே பேசினீர்கள். நாங்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் போதவில்லை என்றால் பெரியார் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள், நான் தருகிறேன். உலகத்தில் எல்லா தேசிய இயக்கத்துக்கும் மொழி தான் முக்கியம். தமிழ் மொழியை தவறாக பேசியபோது, அவரின் கொள்கை, கோட்பாடு சரிந்துவிட்டது. பெரியார் எழுதிய நுால்களை வெளியிடுங்கள். அவர் வள்ளலார், வைகுந்தரை தாண்டி என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? நான் மாறி, மாறி பேசவில்லை. படிக்கும் போதுதான் தெளிவு வருகிறது.


திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பது தான் எனது கொள்கை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்றுகொண்டது, வீடுதோறும் கல்வி என பல விஷயங்களை செயல்படுத்தியுள்ளனர். அதை ஏற்க கூடாது என எதிர்த்தவன் நான். ஆளுநருடன் டீ குடிக்கிறீர்கள், எதிர்த்து போராட்டமும் நடத்துகிறீர்கள். காலையில் மகனும், மாலையில் தந்தையும் பிரதமரை சந்தித்தது மாநில வளர்ச்சிக்கா? சொலுங்கள் பார்ப்போம்.


என்னிடம் சான்று கேட்டு நிற்கும் பெரியார் இயக்கத்தினர் பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக என்ன போராட்டம் நடத்தினார்கள்? ஐபிஎஸ் கேடரில் உள்ளவர்கள் பேசவே கூடாது. அவர் என்னோடு தர்க்கம் செய்ய தயாரா? இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கும் கொடுஞ்செயல் இன்றளவும் தொடர்கிறது. குஜராத்தில் மீனவர்களை கைது செய்யும் போது கடற்படையினர் விரட்டிச்சென்று மீட்டுள்ளனர்.


தமிழகம், புதுச்சேரி மீனவர்களை தொடர்ந்து சிங்களப்படை சிறை பிடிக்கின்றனர். இதற்கு தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். தமிழ்நாட்டுக்கு அதிகாரம் வந்த பின் இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள். நான் அதிகாரத்துக்கு வந்தால் என் மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். திராவிடம் என்ற சொல் எந்த மொழிச் சொல் - திராவிடம் என்ற சொல் இருப்பதால் தான் தமிழ் தாய் வாழ்த்தை நான் புறக்கணித்து, பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையும் பாட்டை பயன்படுத்துகிறேன். தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே என்பது என் கொள்கை என தெரிவித்தார்.