சேலம் கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எனக்கு ஏசி தான் பழக்கம், பேசி பழக்கம் இல்லை. பேசினால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. உங்களை அறிவாளி என சொல்கிறார்கள் அப்போ நாங்கள் முதியோர் அணியா என தெரியவில்லை. ஆற்றல் அணி என்றால் இளைஞர் அணி. அறிவாளி அணி என்றால் ஐ.டி விங் அணி. நாங்கள் உங்களை முன்னேற்றும் மூத்தவர்கள் அணி. டி.எம். செல்வகணபதி ஸ்கெட்ச் போட்டு வேலை செய்வார். தர்மபுரிக்கு அவர்தான் சீனியர். தர்மபுரியில் என்ன செய்வார் என அவருக்கும் தெரியும். இப்போது நான் வந்து மாட்டி இருக்கிறேன். மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினால்தான் வெற்றி பெற முடியும். நான் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை பொறுப்புதான் என்றார்.
முன்பெல்லாம் செல்போனில் போட்டோ எடுத்தால் கருப்பு அடிக்கும். ஆனால் இப்போது எடுத்தால் தெளிவாக தெரிகிறது அது டிரெண்டாகிறது. ஆற்றல் மிகுந்த அணி வெற்றிகரமாக பணியாற்ற வேண்டும். அவரவர் ஊரில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு வாங்கினால் போதுமானது. சொந்த ஊரில் வாக்கு பெறுபவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் முன்னுரிமை என தலைமைக்கழகம் அறிவிக்க வேண்டும். தற்போது காலம் மாறிவிட்டன. இளைஞர்கள் கையில் தான் கட்சி இருக்கிறது. நம்முடைய செய்திகளை படிக்க வேண்டும். எடப்பாடி வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கிறார். எதையுமே செய்யாமல் கொள்ளை அடித்தவர் கூறும் கருத்துக்கு நம்முடைய நிர்வாகிகள் பதில் கொடுக்க வேண்டும். முதலமைச்சரை தரக்குறைவாக பேசும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து முறியடிக்க வேண்டும். இதற்கெல்லாம் கருவியாக ஐ.டி விங் நிர்வாகிகள் செயல்பட்டு கொள்கை வீரர்களாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு மூன்றாண்டு காலத்தில், முதல்வராக அவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். ஆண்டு தோறும் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருந்தது. இன்று அப்படி இல்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டு உடனே நிறைவேற்றப்படுகிறது இதுதான் அரசின் சாதனை. தேவையான உரங்கள் உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் விவசாயிகள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். கரும்புக்கு நல்ல விலை தருகிறோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களை தொடர்ச்சியாக இந்த கூட்டணியில் நீடித்து வருகிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது தேமுதிக அவர்களது கூட்டணியில் இருந்தார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு தேமுதிகவை கழட்டி விட்டார்கள். இது போன்ற காட்சிகள் கடந்த காலத்தில் நடந்துள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக கூட்டணியை தக்க வைத்து வருகிறார். கூட்டணிக் கட்சி தலைவர்கள் மதிக்கும் அளவு முதலமைச்சர் நடந்து வருகிறார் என்று கூறினார்.