1999 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் 100 இடங்களில் உழவர் சந்தைகளை கொண்டு வந்தார். சேலம் மாவட்டத்தில் அப்போதைய அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மாவட்டத்தில் 9 இடங்களில் உழவர் சந்தையை ஏற்படுத்தினார். தற்போது உழவர் சந்தை தொடங்கி 25 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப அணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர்


சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று விவசாயிகளிடம் விற்பனை குறித்து கேட்டு அறிந்தனர். 



பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இன்று 25வது ஆண்டு நறைவடைந்ததையொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன. விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். அவர்களிடம் கேட்டபோது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமையோடு சொல்லுகிறார்கள். அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 2021- 2022 ஆம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து 2022 - 2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் நீர் வள துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகன் நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது என்றார்.



பாமக விவசாயிகள் மாநாட்டில் அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு, தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பாமக தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒருக்குகிறோம். அதற்கான செலவு செய்யப்படுகிறது. ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பாமகவிற்கு பதில் அளித்தார்.