தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ரூ.740 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என செந்தில்குமார் எம்பி தருமபுரியில் பேட்டியளித்தார்.

 

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பெண்கள் நவீன கழிவறை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். இதில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.14.05 இலட்சம் மதிப்பில், மாணவிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தினை, எம்.பி. டாக்டர் செந்தில்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 



 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் பி டாக்டர் செந்தில்குமார், ”மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் மூன்றாவது தவணையாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான விவசாய நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மிகுந்த சுமூகமாக நடைபெற்று வருகிறது. இதில் மூக்கனூர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ரயில் பாதை தள்ளிப் போடக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இந்தப் பணிகள் 70 சதவீதம் முடிவுகள் இந்த இடம் மாற்ற ம் பிரச்சனை வரும். அதனால் ரயில்வே பணிகள் தொடங்குவதில் எந்த விதமான தொய்வுமில்லை. ரயில்வே துறையினர் இந்த பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். மேலும் 70 சதவீத பணிகள் முடிவுற்றவுடன் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

 

அதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டப் பணி தொடங்குவதற்கு ஒன்றிய அரசு ரூ.7840 கோடிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ரூ.4000 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு ஜல்சக்தி திட்டத்தின் மூலம் வழங்குகிறது. இதில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தில் 4000 கோடி ரூபாய் பணம் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மீதி இருக்கிற 4000 கோடியை ஜீ.கா மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முதலாம் கட்டப்பணிக்கு ஜப்பான் நிதி உதவி அளித்தது. இந்த பணிகள் திருப்தி தரமாக இருந்ததால், அவர்களே நமக்கு விருது வழங்கியிருக்கிறார்கள். தற்பொழுது அவர்களுக்கு திருப்பி இருப்பதால், இரண்டாம் கட்ட பணிகளுக்கும் அவர்களே கடன் வழங்குகிறார்கள். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முதல்வர் அறிவிப்பார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 2054 வரைக்கும், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிப்காட் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. 

 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கலசப்பாடி, கோட்டூர் மலை,  பாலமலை போன்ற மலை கிராமங்களுக்கு சாலை அமைப்பதற்கு ஒன்றிய அரசு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் என ஆறு விதமான அனுமதிகளை பெற்று இருக்கிறோம். தற்பொழுது இந்த வனப்பகுதிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 2 கோடி ரூபாய் வரை தொகை செலுத்த வேண்டும். இது பணத்தை கட்டுவதற்கு ஒன்றிய அலுவலகத்தில் நிதியில்லை. சாலை அமைப்பதற்கு பணம் இருக்கிறது. ஆனால் முன்வைப்பு தொகை செலுத்துவதற்கான பணம் இல்லாததால் காலதாமதம் ஆகிறது. இதனை வேறு ஏதேனும் பணிகளில் முன்வைப்பு தொகையை செலுத்தாத காரணத்தால் இந்த சாலை பணி நிலுவையில் இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.