சேலத்தில் வெள்ளி பட்டறையில் கொத்தடிமையாக வேலை பார்த்துவந்த பெண் தனது 6 வயது மகனுடன் தப்பி வந்து மற்ற இரண்டு குழந்தைகளை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததையடுத்து வருவாய் கோட்டாட்சியர் நடத்திய ஆய்வில் 3 சிறார்கள் மீட்கப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு மூன்று பேரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தினேஷ் (17), கருப்பசாமி (6) என்ற மகன்களும், நிர்மலா (12) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் வெள்ளிக் கொலுசு தயாரிப்பு பட்டறையில் மாத சம்பளத்திற்கு ரகுபதி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது உரிமையாளர் கணேசனிடம் இருந்து 1.20 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி வெள்ளி கொலுசு தயாரிப்பு பட்டறையில் வெள்ளிப் பொருட்கள் 17 கிலோ திருடியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மனமுடைந்து ரகுபதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால், ரகுபதி வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் தொகை தரும் வரை ரகுபதியின் மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் வெள்ளிப்பட்டறையில் கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தி கணேசன் வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீதா தனது ஆறு வயது குழந்தை கருப்பசாமியுடன் தப்பிவந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். கொத்தடிமைகளாக வேலை செய்துவரும் தனது மகள் மற்றும் மகனை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது, கணேசன் வெள்ளி பட்டறையில் 16 வயது கொண்ட மேலும் ஒரு சிறுமி வெள்ளி பட்டறை வேலையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கீதாவின் 17 வயது மகன் 12 வயது மகள் மற்றும் 16 வயது போன்ற மற்றொரு சிறுமி ஆகிய 3 பேரையும் மீட்டு தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரும் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் வாயிலாக காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே வெள்ளி பட்டறை உரிமையாளர் கணேசன் தங்களை நல்ல முறையில் பார்த்துக் கொண்டதாகவும் தாயுடன் செல்வதற்கு தங்களுக்கு விருப்பம் இல்லை என கீதாவின் பிள்ளைகள் தெரிவித்ததால் வெள்ளி பட்டறை உரிமையாளரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.