சேலம் மாவட்டம் கெங்கவல்லி படுத்துள்ள சித்தன் பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு முறையான பேருந்து வசதி கேட்டு மனு அளித்தனர். இதுகுறித்து சித்தன் பட்டி பகுதி மக்கள் கூறுகையில், சித்தன் பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே துவக்கப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் கூடமலை பகுதிக்கு தான் செல்ல வேண்டும். அந்தப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது எங்கள் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கூட மலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இல்லை. பேருந்து வராததற்கு காரணம் எங்கள் கிராமப் பகுதியில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் கூடமலை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு நடந்து செல்ல சிரமமாகவும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்றும் தெரிவித்தனர். மேலும் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி சாக்கடை வசதி கூட இல்லாமல் உள்ளது அதையும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி கேட்டு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 50 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ஆனால் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதி மற்றும் கழிவறை வசதி இல்லை என மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெற்றோர்கள், ”கொண்டப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் வகுப்பறை வசதி, கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக அரசிடம் பலமுறை பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். மேலும் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது. வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் வாகனங்களை வேறு வழியில் செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.