சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு மலைப்பகுதியில் தீ விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 



மேலும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது என எச்சரித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வன பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலா பயணிகளும், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


இதனிடைய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, "வெளி மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதாரத்துறையால் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை சேலத்தில் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.



மேலும், சேலம் ஏற்காடு மலைப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லாமல் இருக்க சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.


குறிப்பாக கோடை காலம் துவங்கி வரும் நிலையில் வனப்பகுதிகளில் இருக்கும் வன உயிரினங்கள் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது குறித்த கேள்விக்கு, வனத்துறை மூலமாக வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது குறையும் என்றும் கூறினார்.