தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் சுகாதார சீர்கேடாக இருப்பதை கண்டறிந்து அப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியதால் தனது உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஷ், ப்ளீச்சிங் பவுடர், பெனாயில் வாங்கி வரச் சொல்லி பள்ளி மேலாண்மை குழு தலைவர் உடன் கழிவறையை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலையில் தூய்மை செய்தார்.



 

தூய்மை செய்துவிட்டு இதைப்போல தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏழை பள்ளி மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் அவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும். கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பெனாயில் போன்றவை இல்லை என்றால் எனக்கு சொல்லுங்கள் நான் வாங்கி தருகிறேன். தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் கூறுங்கள் நானே தூய்மையாக்கி விட்டு செல்கிறேன் என ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அரசு பள்ளி ஆய்வுக்காக சென்ற இடத்தில் எம்எல்ஏ, பள்ளி கழிவறையை தூய்மை செய்த சம்பவம்,  பொதுமக்கள் மற்றும் மாணவிகளுடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

மாரண்டஹள்ளி அருகே தாய், இரண்டு குழந்தைகள்  கிணற்றில் சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? என காவல் துறையினர் விசாரணை.

 

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்- லட்சுமி தம்பதியினருக்கு பிரசாந்த் (4) லதா (6 மாதம்) பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். நேற்றிரவு அருகே இருந்த கிணற்றை சந்தேகமாக பார்த்த போது, அதில் லட்சுமி மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மாரண்டஹள்ளி காவல் நிலையத்திற்கும், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

இந்த தகவல் அறிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இருந்த 3 உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த மாரண்டஹள்ளி காவல்  வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளுடன், தாய் கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.