சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சிகளுக்கான தூய்மை இயக்கமான "நம்ம ஊர் சூப்பரு" திட்டம் தொடக்க விழா மற்றும் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நம்ம ஊர் சூப்பரு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.


பொதுமக்களுக்கு பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகளையும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வழங்கினர். அதன்பின், வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சுத்தம் செய்தனர். பின்னர், வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் மக்கும் குப்பை, மக்கா குப்பை போடுவதற்கு குப்பை தொட்டிகள் ஒவ்வொரு வீடாக சென்று அமைச்சர்கள் வழங்கினார்.



முன்னதாக முதன்மை உரையாற்றிய சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், நீண்ட காலமாக வெள்ளக்கல்பட்டி பகுதியில் வசித்து வரும் மக்களின் கோரிக்கையான அவர்கள் வசிக்கும் இடத்திற்கு உடனடியாக பட்டா வழங்குமாறு கேட்டதை உடனடியாக வழங்கும் கண்ணனாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்கிறேன் என்று புகழ்ந்தார்.


பின்னர் , நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகரங்களுக்கு தூய்மை இயக்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கிராம ஊராட்சிகளுக்கான தூய்மை இயக்கமாக "நம்ம ஊர் சூப்பரு" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வசிப்பிடங்களை சுத்தம் மற்றும் சுகாதாரமாக பேணிக் காக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கழிவுப் பொருட்களை மக்கும் குப்பை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பொதுமக்கள் வழங்கிட வேண்டும். அதேபோல சாக்கடை கழிவு நீர், நீர்நிலைகளில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகே தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரித்தால் நோய் பாதிப்புகளை பெருமளவில் தடுத்து விட முடியும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.


 


இதனையடுத்து, வெள்ளக்கல்பட்டி ஊராட்சி குளத்தை சுற்றிலும் பனை விதைகளை நடும் பணியையும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி இருவரும் தொடங்கி வைத்தனர். நீர் நிலைகளை பாதுகாத்திடும் வகையில் ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், சேலம் மாநகர ஆணையாளர் கிறிஸ்துராஜ், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.