தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக உரிமை கோராத சடலங்கள் மாவட்டத்தில்  உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில், நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தருமபுரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பட்டதாரிகள் இணைந்து நடத்தி வரும் மை தர்மபுரியின் தன்னார்வலர் குழுவின் மூலம் தருமபுரி சுடுகாட்டில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் 9 உடல்களுக்கும் மாலை அணிவித்து ஊதுபத்தி கற்பூரம் காட்டி இறுதியஞ்சலி செய்த பின்னர் ஒரே இடத்தில் பெரிதாக வெட்டப்பட்ட சவக்குழியில் 9 சடலங்களையும் தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கீழே இறக்கிய பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்பட்டது. பின்னர் பால் ஊற்றி தேங்காய் உடைத்தும் கற்பூரம் மற்றும் ஊதுபத்தி காட்டி இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதுகுறித்து மை தர்மபுரி தன்னார்வல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் கூறுகையில், ”கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை பட்டதாரி இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு நற்காரியங்கள் செயல்படுத்தி வருகிறோம். அதில் இன்று முதல் முறையாக தருமபுரி மாவட்ட காவல்துறையினர் கேட்டுகொண்டதின் பெயரில் 9 உரிமை கோராத சடலங்களை நாங்களே எங்கள் உறவினர்களாக கருதி இறுதி சடங்குகள் செய்து எங்கள் செலவிலேயே நல்லடக்கம் செய்தோம். மேலும் தருமபுரி மாவட்டத்தில் இதுபோல எங்கு உரிமை கோராத சடலங்கள் இருந்தாலும் 

 தெரிவித்தால் எங்கள் செலவிலேயே நல்லடக்கம் செய்கிறோம்.  உறவினர்கள் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நலிவடைந்தவர்கள் எங்களிடம் கேட்டாலும் நல்லடகம் செய்ய தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.