சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ஸ்கேன் சென்டர், குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு மற்றும் சமையல் கூடம், துணி சலவை செய்யும் இடம், பிரேத பரிசோதனை அரை உள்ளிட்ட பல்வேறு பிரிவு கட்டிடங்களுக்கு சென்ற அவர் நோயாளிகள் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் காத்திருந்த நோயாளிகளின் உறவினர்களிடமும் அமைச்சர் மா சுப்பிரமணியன் குறைகளை கேட்டு அறிந்தார். இதனை அடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் தலைமையில் அனைத்து துறை மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.


Minister Ma. Subramanian: தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய கட்டிடங்கள் புதிய அறுவை சிகிச்சை கருவிகள் புற்றுநோய்க்கான பெட் சீடி கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் 92.77 கோடி ரூபாய் மதிப்பில் செய்து தரப்பட்டுள்ளது. நாள் தோறும் மூன்று ஆயிரம் புற நோயாளிகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 4500 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகவும் குறிப்பிட்டார். புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்


மேலும், சேலம் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது என்றார். சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுகாதாரத் துறையின் அனைத்து பிரிவுகளின் கீழ் 220 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அம்மாபேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அங்கு தேவையான மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார்.



தமிழகத்தில் அரசு மருத்துவர் பணியிடத்திற்காக நடைபெற்ற தேர்வில் 24 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 15 நாட்களில் இந்த பணி முடிந்து 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறினார். கடந்த மூன்றாவது ஆண்டுகளில் மருத்துவ தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் சுகாதாரத் துறையில் 23 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தொடர்ந்து, சேலம் மாவட்டம் பண்ணப்பட்டி மாரகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடேஷ். இவரது மகன் சூர்யா. இவர் நாலு வயது முதல் ஹீமோபிலியா என்னும் அறிவகை ரத்த உறையாமை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் கண் வீக்கத்துடன் சிவந்தும் மிக அதிக வலியுடன் சேலம் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவப் பிறவிக்கு கடந்த மாதம் வந்துள்ளார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரித்த போது மூணு வயதில் பட்டாசு வெடித்ததால் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை முற்றிலும் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கண்ணில் வீக்கம் வலியும் அதிகமாக இருந்து கொண்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இடது கண் வீக்கம், கண் இமைகளில் வீக்கம் கருவிழி முழுதும் தழும்பு, வெண் படலம் மெலிந்து அதன் வழியே உள்ளிருக்கும் தசைகள் துருத்தி கொண்டிருத்தல் மற்றும் சிறுவயதில் இருந்து பார்வை முற்றிலுமாக இழந்திருத்தல் ஆகியவை கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மாணவனின் உடல்நிலை குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.