சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ பட்டப்படிப்பை முடித்த 101 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் 36 மருத்துவ கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் முடிந்து இறுதியாக சேலம் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா. சேலம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் பேரிடர் காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் 2000 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 3500 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர்.



புற்றுநோயை கண்டறியும் அதிநவீன ஸ்கேன் கருவி சென்னை, மதுரையில் இருந்த கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம் கோவை உட்பட ஐந்து இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் காப்பாற்றிவிடலாம். அதன் தன்மை அதிகரிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. லப்பர் தோட்டம், தோல் தொழிற்சாலை, சாயத்தொழில் உள்ளிட்டவைகள் அதிகமிருக்கும் மாவட்டங்களில் இந்த புற்றுநோயை கண்டறியும் அதிநவீன ஸ்கேன் கருவிகள் துவங்கியப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.


தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் கருவிகள் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது. குரங்கம்மை என்ற அவசரநிலையை அறிவித்த நிலையுடன் உடனடி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் தமிழகம் தான். பன்னாட்டு விமான நிலையங்களில் வெப்பநிலையை கண்டறிந்து பாதிப்பு உள்ளதா? என்று கண்டறியும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிரத்தியேக வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை என்ற பாதிப்பு இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லை. உலகளவில் 200க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனை கண்டறிந்து பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.



2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு பல்வேறு வடிவங்களில் உருவம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தியது. அதேபோன்று மீண்டும் குரங்கம்மை பாதிப்பு மிகப்பெரிய அவசர நிலையை உலக நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் வைரஸ் பாதிப்பு எதிராக மக்கள் போராடவேண்டும் என்ற நிலையில், மருத்துவர்களின் மிகப்பெரிய பணிகளும், பங்கும் அதிகம் உள்ளது. மருத்துவ கட்டமைப்புக்கு சிறந்த மாநிலங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு பரிசுகள் வழங்கி வருகிறது. மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பயின்ற ஆசிரியர்கள் தற்போது துறை தலைவர்களாக இதே கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல உங்கள் 101 பேரில் 10 பேர் இதே கல்லூரியில் துறை தலைவர்களாக வந்து கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.


இந்த விழாவில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி காந்தன், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.