தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 



பின்னர், பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, "1973 ஆம் ஆண்டு முதல் முதலில் ஒன்றியக் கழகமாக உருவெடுத்தது. காலையில் முரசொலியில் பார்த்தால், அதற்கேற்ப செயல்பாடுகள் அமைந்தது. வாக்காளர்கள் பட்டியல் உடனுக்குடன் சரி பார்த்தோம். திமுக இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. ஒரே ஒரு சட்டமன்றமாக இருந்தது, இன்றைக்கு ஒரேயொரு சட்டமன்றம் மட்டுமே வாக்கு குறைவு என்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்ப்பு இருக்கும் போதுதான் கட்சி வளர முடியும். சேலத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். இந்த முறை சரியாக உழைத்தால் 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெறும் பேச்சுக்காக இல்லை. நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் செய்த தவறால் சில இடங்கள் மாறலாம். ஆனால் அப்படி விடக்கூடாது .


தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும். கட்சியினரை எந்த சங்கடமில்லாமல் செயல்படுவதை நாங்கள் உடன் இருப்போம். மாநகராட்சியில் அதிகாரிகளோடு கலந்து பேசி பிரச்சினைகளை சரி செய்வோம். நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முதலில் வெற்றிச் செய்தி சேலத்தில் இருந்து வந்தது. திமுக செல்வாக்கோடு இருக்கிற இடம் சேலம். 6 முறை மாவட்ட செயலாளராக இருந்தேன். ஒவ்வொரு முறையும் தேர்தல் வைத்தே வெற்றி பெற்றேன். போட்டியின்றி வெற்றி பெற விடமாட்டார்கள். தஞ்சையில் ஜாம்பவானாக இருந்தார்கள். அதுபோன்ற நிலை சேலத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக சேலம் மாவட்டம் உதவும். டெல்டா மாவட்டங்களில் 44 தொகுதிகளில் முழுமையாக ஜெயிப்போம் என்று சொல்லி 40 தொகுதிகளில் ஜெயித்தோம்.


 


நிர்வாகிகளின் கடுமையான உழைப்பு திமுகவை தொடர்ந்து எல்லா தேர்தலில் வெற்றி பெற வைக்கிறது. ராஜேந்திரன் அமைதியானவர். நினைத்ததை முழுமையாக செய்யக் கூடியவர். கூட்டம், ஆர்பாட்டம் என்றாலும் சேலம் முதலிடத்தில் உள்ளது. கலைஞருக்கு 16 அடி சிலை வைத்து நிறுவியது அவரது சொந்த செலவில் அமைத்துள்ளார். பொது உறுப்பினர்கள் கூட்டம் கிளைக்கழக செயலாளரை சந்திப்பதற்குத்தான். இதற்காகவே முதலமைச்சர் பொது உறுப்பினர் கூட்டம் நடத்த சொல்லியுள்ளார். கீழே இருந்து பணியாற்றும் அவர்கள்தான் கட்சியின ரத்த நாளங்கள். கிளைச் செயலாளர்கள் பணியால்தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம்" என்று பேசினார்.


இந்த நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.