சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, 3197 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 475 மாற்று திறனாளிகளுக்கு 2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை வழங்கினார். இதே போன்று சேலம் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிக்கு 2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை வழங்கிய அவர், சேலம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பு ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மொத்தமாக 3,720 பயனாளிகளுக்கு சுமார் 26.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்குவது மட்டுமல்ல அவர்களுக்கு வீடு கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு இதற்கான நிதியை ஒதுக்க வில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் செய்த பல்வேறு திட்டங்களை குறிப்பாக முதல்வரின் முகவரி, நீங்கள் நலமா, உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மக்களை நோக்கி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செல்லும் நிலை உள்ளது.



கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சர் நிறைவேற்றிய திட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்காகவே நிறைவேற்றி உள்ளார். இங்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மற்ற மாநில முதல்வர்களும் பின் பற்றும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், குறிப்பாக காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஒரிசா மாநிலத்தில் இருந்து வந்து நேரடியாக பார்வையிட்டு செல்லும் நிலை உள்ளது என்று கூறினார். இதே போன்று மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அனைவரும் கூறிய நிலையில் அதை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றும் வகையில் சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் இவருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.


நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.