சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் சேலம் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில்  கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



முன்னதாக, கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் கூட்டுறவுத்துறைக்கு கீழ் வரும் நியாய விலைக் கடை, கூட்டுறவு சொசைட்டி, பால் கொள்முதல் நிலையங்களை புதுப்பித்து தரவேண்டும் எனவும், புதிய கட்டடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு பேசிய கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம், "சேலம் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுக்கு கூட்டுறவு துறையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்". 



இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் தரும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடைகளில் பணி நியமனம் வெளிப்படையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். குடும்ப அட்டை இல்லாவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் கல்விக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் என அனைத்து வகையான கடன் வழங்கவும், அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக சேர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டுறவு துறையில் உறுப்பினராக சேர்க்கப்படும், கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவானது 18 வயது பூர்த்தி செய்த அனைவரும் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம், கூட்டுறவு வங்கி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும் என்று கூறினார்.



அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சியின் போராட்டம் வெறும் அரசியலுக்காக மட்டுமே என்றார். மேலும், கல்யாணம் ஆகி 60 நாட்களில் குழந்தை பிறந்துவிடுமா? என்று விமர்சித்த அவர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உறுதியளித்தார். 


அதன்பிறகு, அங்கிருந்து சென்ற அமைச்சர் NGGO ஸ்டோர் மற்றும் அழகா புரத்தில் உள்ள நியாய விலை கடையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.