சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் இன்று காலை சேலம், நாமக்கல் , கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்ட சமூக நலன்மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது , “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மிக முக்கியமான துறையாகும். திருநங்கைகள் மற்றும் முதியவர்கள் காக்கும் துறை. குழந்தை திருமணம் நடந்தால் உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பிறகு அமைச்சர் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சமூக நலத்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்தார். அதன்பிறகு, இன்று மாலை சமூகநலத் துறை சார்பாக 135 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது. மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத்தொகையாக 4 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ரூபாயும், திருநங்கைகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் கொரோனா சிறப்பு நிவாரண நிதி 25 நபர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றால், பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் தாய்,தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் என 6 குழந்தைகளுக்கு மொத்தமாக 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த பெண்களுக்கு தற்போது திருமண உதவி வழங்கப்பட்டது. கடந்த ஆட்சிகாலத்தில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த தொகை ரூ 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. தமிழகத்தில் அனுமதியில்லாத இல்லங்களை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா ஊரடங்கு நேரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க ஏற்கனவே உள்ள நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.