சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள நிறைவு விழா நடைபெற்றது. பாரதி வித்தியாலய சங்க தலைவர் சீனி துரைசாமி தலைமையில் நடைபெற்ற பவள விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு மேல்நிலை பள்ளி பயின்ற பிறகு உயர்நிலை கல்விக்கு செல்வது 50 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. ஆனால் தமிழ்நாடு ஏற்கனவே 51 சத்விகிதமாக உள்ளது இதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் செய்த கட்டமைப்பு தான் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், குழந்தைகளும் பெற்றோரின் விருப்பப்படி பயில வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  


தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, பள்ளி கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு பெற்று, பள்ளிகள் சிறப்பாக செயல்பட அமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு இது போன்ற தனியார் பள்ளிகள் குறிப்பாக கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் தமிழகத்தில் சிறப்பான கல்வியை தந்து கொண்டு உள்ளனர். இது போன்று அனைத்து தரப்பினரும் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கிட ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.


இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குறைந்த நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர் என்பதை பெருமையோடு கூறிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ, சிபிசி பள்ளிகளோ எதுவானாலும், அதில் பயிலும் மாணவர்கள் கல்வி தான் முக்கியம் என்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ மானவியர்களின் நலனில் அக்கறை செலுத்திட வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.


தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ”எந்த துறையும் அரசும் மட்டும் செயல்படுத்திடுவது கடினம் பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் என்று தெரிவித்த அவர், அது போன்று தான் பள்ளி கல்வித்துறையிலும் தனியார் பங்களிப்பு முக்கியம் என்றும், இதன் காரணமாகவே, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்த துறைக்கு 39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று பேசிய அவர், கலைஞர் ஆட்சியிலும், தற்போதைய முதலமைச்சர் ஆட்சியிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருவதாகவும், அதற்கு இந்த விழாவே சாட்சி என்றார். கடந்த காலங்களில் இது போன்ற ஆணை பெறுவதற்கு பலரை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வந்ததை மாற்றி யாரையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு மாற்றி உள்ளார். அது மட்டுமல்ல ஆசிரியர் கவுன்சிலிங் முறையில் எந்த ஒரு சிறு தவறும் நடந்திடாத வகையில் செயல்பட்டு, ஆட்சியை விமர்சிக்கும் சமூக வலைத்தளத்தினரும் எதிரானவர்களும் பாராட்டும் வகையில் தமிழ்நாடு கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும், இதே போன்று அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டிலிட்டார். கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.