எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:


நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



அமித்ஷா விளக்கம் என்ன?


இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை. நேற்று முதல் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம், அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். 



விசிக ரயில் மறியல்:


இதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் போது, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை  கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.


திமுக ஆர்ப்பாட்டம்:


அம்பேத்கரை இழிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை உள்ளிட்ட ஆறு இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.