சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. புயல் கரையைக் கடந்து மழை நின்று இருந்தாலும் சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் சாலைகளில் இருந்த மரங்கள், மின்சார கம்பங்கள் மிக்ஜாம் புயலினால் சாலைகளில் சாய்ந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து அதீத கனமழை பெய்ததால் சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



கடந்த மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பிரட், பால் பவுடர், வாட்டர் பாட்டில், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி லாரி மூலமாக நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியினை சேலம் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நிவாரண பொருட்கள் அனுப்ப விரும்புவோர் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு பொருட்களை வழங்கலாம் என்றும் அங்குள்ள அரசு அலுவலர்கள் வாயிலாக நிவாரண பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். மேலும் நிவாரணப் பொருட்களை வழங்க விருப்பமுள்ளவர்கள் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் இதற்குரிய பொறுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், பல்வேறு நிவாரணப் பொருள்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியினை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். 



இதேபோன்று, பாஜக சேலம் பெருங்கோட்டம் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மிக்ஜம் புயல் வெள்ளத்தில் பாதித்த சென்னை மக்களுக்கு, பாஜக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கிட அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சேலம் மாநகரம், சேலம் கிழக்கு மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் பெருங்கோட்டம் சார்பில், சென்னைக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இதனை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


முன்னதாக கடந்த திங்கட்கிழமை சென்னையில் வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாநகராட்சியில் இருந்து 225 தூய்மை பணியாளர்கள் சுகாதார மேற்பார்வையாளர்களுடன் சென்னைக்கு விரைந்தனர். குடிநீர், பாய், பெட்ஷீட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணி உபகரங்களுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து 4 பேருந்துகளில் புறப்பட்ட தூய்மை பணியாளர்களை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். குறிப்பாக சேலம் மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 225 தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும், அவர்களது அடிப்படை தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், அதேபோல் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சாலைகளில் உள்ள மரங்கள், மின்சார கம்பங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.