சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 82,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததால் முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சை, நாகை, திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000லிருந்து 1,25,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 92 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Continues below advertisement

இதையொட்டி, முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 22,150 கனஅடி கொள்ளிடத்தில் 29,984 கனஅடி, அய்யன், பெரு வளை, புள்ளம்பாடி ஆகிய 3 வாய்க்கால்களில் மொத்தம் 1,060 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு, இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 82,785 கன அடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 82,038 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணைக்கு 97,474 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று முக்கொம்புவிலிருந்து காவிரியில் 22,350 கன அடியும், கொள்ளிடத்தில் கூடுதலாக 43,664 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்ததை அடுத்து, திருச்சி நீர்வளத் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தன் முக்கொம்பு மேலணையில் நேற்று மாலை ஆய்வு செய்தார். மேலணை உதவிப்பொறியாளர் ராஜா உடனிருந்தார். இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியது: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட 82,038 கனஅடி நீர், இன்று மாலைக்குள் வந்து சேரும். எனவே, முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியதாவது: பருவமழை காலம் என்பதாலும், மேட்டூர் அணை நிரம்பியதாலும், அணைக்கு வரும் நீர் வரத்தைப் பொறுத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ கூடும். எனவே, பருவமழைக் காலம் முடியும் வரை கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் குளிக் கவோ, துணி துவைக்கவோ, கால் நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என்றார்.

இதேபோல, கரூர், தஞ்சை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் மற்றும் ஆற்றையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என நீர்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.