கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்தும் நிரம்பி காவிரி ஆற்றல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. 



நீர் திறப்பு:


இதனிடையே கடந்த 28 ஆம் தேதி முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு தற்போது அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 1,23,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு, அணையின் நீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சரபங்கா வடிகால் திட்டம்:


மேட்டூர் அணையின் நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.565.00 கோடி 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. நில எடுப்பு வடிவமைப்பில் மாற்றம் காரணமாக ரூ.673.88 கோடியாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியினை எட்டும் பொழுது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு நீர் சென்றடைய திட்டமிடப்பட்டது. இதன் மூலம் 4061.16 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திம் 2021 ஆம் ஆண்டு சோதனை ஓட்டமாக ஒரு ஏரி மட்டுமே நிரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீரேற்று நிலையங்கள் கட்டுமானப் பணிகள் மற்றும் 31 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 31.08.2021 வரை 21 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியுள்ள நிலையில் 56 ஏரிகளுக்கு நீரேற்றம் செய்வதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, சரபங்கா வடிகால் திட்டத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார். இதனால் சேலம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.