சேலம் ; மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியில் இருந்து 10,850 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29ந்தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ந்தேதி 2வதுமுறையாகவும் ஜூலை 20 ந்தேதி 3வது முறையாகவும் ஜூலை 25ந்தேதி 4வது முறையாகவும் ஆகஸ்ட் 20ம் தேதி 5வது முறையாக மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத்தொடங்கியது.
கடந்த 20-ந்தேதி அதிகாலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இதன் காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியில் இருந்து 10,850 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு 24 ஆயிரம் கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு ஆற்றில் பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.