சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்துள்ளது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது நேற்று வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 16,500 கன அடியாக நீடிக்கிறது.

இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 15,500 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு - பரிசல் பயணத்திற்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, 18,000 கன அடியாக குறைந்ததால், பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து, உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சரிவால், மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து ரம்மியமாக தண்ணீர் கொட்டுகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரியாற்றில் பரிசல் இயக்க, ஐந்து நாட்களுக்கு பின் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால், தொடர்ந்து ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.