ஆகஸ்ட் மாத இறுதியுடன் 88 ஆண்டுகளை நிறைவு செய்து 89ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மேட்டூர் அணை. 1834 ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை மேட்டூர் அணைக்கான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. மேட்டூர் அணையின் கட்டுமான பணி 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. ரூபாய் 4.80 கோடி செலவில் ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது மேட்டூர் அணை. 



காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் துவங்கி தனது நீண்ட பயணத்தில் தமிழ்நாடு வழியாக பூம்புகார் கடற்பகுதியில் வங்கக்கடலுடன் கலக்கிறது. கர்நாடகாவில் துவங்கினாலும் காவிரி ஆற்றின் அதிகபட்ச பயணம் தமிழ்நாட்டில் உள்ளது. 



தமிழகத்தில் மிக பெரிய அணையாக கருதப்படும் மேட்டூர் அணை. இன்று தமிழக விவசாயிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்து வரும் மேட்டூர் அணையானது அன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளை கொண்டு 9 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள் மற்றும் 26 ஆயிரம் கால்வாய்கள் வாயிலாக டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.



88 முறை குறுவை, சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 12ம் தேதி வரை 17 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு சேர்த்து 18வது முறையாக திறக்கப்படுகிறது. ஜூன் 12ம் தேதி முன்னதாக 10 முறை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் 60 முறை காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



மேட்டூர் அணையின் விவரம்:


மேட்டூர் அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பு 16 ஆயிரத்து 300 சதுர மைல். அணையின் மொத்த சேமிப்பு உயரும் 120 அடி. ஆனையின் அதிகபட்ச உயரம் 214 அடி. அணையின் அதிகபட்ச அகலம் 171 அடி. அணைப்பகுதியில் ஆற்றின் அகலம் 1,100 அடி எனப் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது மேட்டூர் அணை.



கடந்த ஆண்டு தொடர்ந்து 438 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்தது. வழக்கமாக சாகுபடிக்கு சுமார் 330 டிஎம்சி தண்ணீர் தேவை. கடந்த ஆண்டு நீர் மேலாண்மை திட்டம் மூலம் 210 டிஎம்சி தண்ணீரிலேயே சாகுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக கோடை காலத்திலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையவில்லை. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது.