சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30992 கன அடியாக அதிகரிப்பு.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று அணைக்கு வரும் நீரில் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,338 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 30,992 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300கன அடி நீரும் உபரி நீர் போற்றி வழியாக வினாடிக்கு 28,700கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.35 அடியாகவும் நீர் இருப்பு 89.30 டிஎம்சியாகவும் உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 78,000 கன அடியாக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 78,000 கன அடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடக மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டின. இதைத்தொடர்ந்து இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளிலும், காவிரி கரையோரமும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் முதல் அதிகரிக்க தொடங்கியது.இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 78,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீா்மட்டம் 117.50 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட காவிரி கரையோரம் உள்ள 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.