நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகப்பகுதிகளில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் நெகிழிப் பைகள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில், நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மஞ்சப்பை பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தனியார் பங்களிப்பின் மூலம் தலா ரூபாய் 1.60 லட்சம் மதிப்பில் 3 தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களின் செயல்படுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும். சுற்றுலாத்தளமான ஏற்காடு மற்றும் சேலம் மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள வணிக வளாகப்பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. பொதுகமக்கள் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயமாகவோ அல்லது 10 ரூபாய் நோட்டாகவோ அல்லது 2 ஐந்து ரூபாய் நாணயமாகவோ அல்லது அலைபேசியிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவோ செலுத்தி மஞ்சப்பையினை பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் பல்வேறு முக்கியப்பகுதிகளிலும் பல்வேறு கட்டங்களாக இதுபோன்ற தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சேலம் மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நெகிழிப்பை பயன்பாட்டினை முற்றிலும் அகற்றிடும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மொத்த வணிக விற்பனையாளர்கள், விற்பனை முகவர்கள் ஆகியோருடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், பயன்படுத்தக் கூடிய வகையிலான இதற்குரிய மாற்றுப்பொருட்கள் குறித்தும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்றார். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஏற்காட்டில் நெகிழிப் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கு ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணித்திட ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஏற்காட்டில் அமைந்துள்ள சிறிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நெகிழிப்பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திட தெரிவிக்கப்பட்டு அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்கள். 


தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தில் பணம் செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பையினை பெற்றுச் சென்றனர்.