மொரப்பூர் அருகே பாலின சோதனை நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஒரு பெண்ணிடம் கருவில் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என்று சொல்வதற்கு 26,400 ரூபாய் வாங்கியதாக மோசடி கும்பல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வந்த சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (52) என்பவர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்தத் தகவல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இணைய இயக்குனரின் அறிவுறுத்தலின்படி அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, குழுவினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சட்டத்திற்கு விரோதமாக ஈடுபட்ட அந்த கும்பல் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

 

விசாரணையில் மோசடி கும்பல் கூறியது:

 

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள் (எ) புஷ்பாவதி வீட்டில் புஷ்பாவதி, (52) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், (28) ஐயப்பன், (34) மூவரும் முறையான மருத்துவம் படிக்காமல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என்று சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கியதாகவும் மொரப்பூர் காவல் துணை ஆய்வாளர் வான்மதியிடம் மூவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.

 

இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார், (24) என்பவர் டிரைவர் வேலை செய்து வருவதாகவும், இந்த சம்பவ இடத்திற்கு வாடகைக்காக மட்டுமே வந்ததாக தெரிய வந்ததை அடுத்து அவரை விடுவித்தனர்.

 

மேலும் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களில் சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (52) இவரை சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். கவியரசன் மற்றும் ஐயப்பனை அரூர் கிளை  சிறைக்கு அழைத்து சென்றனர்.