சேலத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாகநடந்தது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய சூரமங்கலம், ஜருகுமலை, சோளம்பள்ளம், வெள்ளக்கல்பட்டி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படபிடிப்பு நடந்தது.



இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் வில்லனாக பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். திரைப்படத்தின் இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மலைவாழ் மக்கள், ஏழை பெண்கள், திருநங்கைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



ஜருகு மலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடத்தை நமக்கு நாமே திட்டத்தில் புதுப்பிக்க உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோரிடம் வழங்கினார். இது தவிர ஜருகுமலை கிராமத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மலைப்பாதை அமைக்கப்பட்டது. ஆபத்தான மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு ஜருகு மலை மலைப்பாதையில் வளைவுகளில் எதிர்வரும் வாகனங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் 10 இடங்களில் குவிலென்ஸ் பொருத்தப்பட்ட கண்ணாடி அமைக்க ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் ஸ்டேண்டுடன் கூடிய குவி லென்ஸ் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இது தவிர அரபலி அம்மாள் என்ற உடல் ஊனமுற்ற ஏழை பெண் ஒருவருக்கு மளிகை கடை வைப்பதற்கான குளிர்பானங்கள், சிப்ஸ் வகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உதயநிதி ஸ்டாலின் வழங்கப்பட்டது. மேலும் 20 மாணவர்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது தவிர 5 லட்சம் ரூபாய் 55 பேருக்கு உதவி தொகையாக காசோலையும் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பக மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாநில செயலாளர் பாபு , பொருளாளர் ராஜா, சேலம் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படத்தின் இறுதி கட்ட படம் பிடிப்பு இன்றுடன் முடிவடைவதால் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.