பாலக்கோடு அருகே 65 இலட்ச ரூபாய் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, மக்களை தேடி மருத்துவ திட்டத்தினை ஆய்வு செய்தார்.


 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கும்மனூர் ஊராட்சியில் உள்ள நம்மாண்ட அள்ளியில் 65 லட்ச ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, நம்மாண்ட அல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் ‌ தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்‌ ஆகியோர் கலந்து கொண்டு காரிமங்கலத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மற்றும் செவிலியர் குடியிருப்புபுதிய கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு துறைசார் பில் 127 பயனாளிகளுக்கு 1கோடியே 7இலட்சத்து 58ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 





 

அதனை அடுத்து பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம்‌ பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று  மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள் குறித்த நேரத்தில்‌ கிடைக்கிறதா என்றும், மருத்துவ சிகிச்சை அளிக்கபடுகிறதா‌ என மக்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், சுகாதாரதுறை இயக்குனர் செல்வவிநாயகம், சார் ஆட்சியர் சித்ரா விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி இன்பசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


 



 

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியாக சரிந்ததால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி.

 



 

கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணையிலும் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆனது அதிகப்படியாக வெளியேற்றப்பட்டது. தமிழக காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. 

 



 

இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரி கரையோரங்களிலும் மழையின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 35 ஆயிரம் கன அடியிலிருந்து 25,000 கன அடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் ஒரு மாதங்களுக்கு பின் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக நீக்கப்பட்டு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 66-வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் நேற்று காலை கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 51,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வர வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் பரிசல் இயக்க தடை விதிக்க வாய்ப்புள்ளது.