தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் புதன் கிழமைகளில் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வார சந்தையில் சுமார் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு  முந்தைய சந்தை என்பதால், இறைச்சிக்காக ஆடு,மாடு, கோழி வாங்க ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வந்தனர்.




 

இன்றைய சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தது. இன்றைய சந்தைனில் ஆடு விலை 7000 முதல் 25,000 வரை விற்பனையானது. இன்றைய சந்தையில் சுமார் 3000 ஆடுகள், சுமார் 80 லட்சத்திற்கு விற்பனை ஆனது. மேலும் 1500 மாடுகள் விற்பனை வந்திருந்தது. இதில் வளர்ப்பு மாடுகள் 7,000 முதல் 15000 வரையிலும், பால் மாடுகள் 25000 முதல் 50,000 வரை விற்பனையானது. மேலும் கொரோனா தொற்று பரவல் கேரளா ஏற்றுமதி குறைவாக இருப்பதால், சுமார் 80 லட்சத்திற்கு மட்டுமே மாடுகள் விற்பனையானது. மேலும் நாட்டுக்கோழி, காய்கறிகள், பொங்கலுக்கு தேவையான பொருட்கள், மண் பானை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் சந்தைக்கு வந்திருந்தனர். 

 



 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும்  வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு,  குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாய்பூட்டு, சாட்டை  ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 



 

இன்னும் பொங்கலுக்கு  இரண்டே நாட்கள் இருப்பதால், அலங்கார பொருட்களை விவசாயிகள் வாங்கி சென்றனர்.  இதனால் அலங்கார பொருட்கள் விலை உயர்ந்தும் விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எப்பொழுதும் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் வார சந்தையில் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், இன்றைய சந்தையில், சுமார் 2 கோடிக்கு  மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் கொரோன பொதுமுடக்கத்திற்கு பின், கடந்த இரண்டாண்டிற்கு  பின் இந்த வாரச் சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.