தமிழ்நாடு அரசு கேபிள் டிவியானது சேலம் மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள், நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அரசு கேபிள் ஒளிபரப்பு முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் தலைமை கேபிள் நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறி 300-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு கேபிள் தாசில்தார் ஃபெலிக்ஸ் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, கேபிள் ஒளிபரப்பு தடைப்பட்டுள்ளதை விரைவில் சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து அவரிடம் மனுக்கள் வழங்கினர். 



இதுகுறித்து ஆபரேட்டர்கள் கூறும்போது, தமிழக அரசு கேபிளை முறையாக பராமரிக்காததால் சேலம் மாவட்டத்தில் இருந்த நான்கரை லட்சம் இணைப்புகள் பாதியாக குறைந்து விட்டன என்றும், கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் இணைப்புகள் குறைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். அதிலும் கடந்த மூன்று நாட்களாக கேபிள் ஒளிபரப்பு முற்றிலும் தடைபட்டுள்ளதால் மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு ஒளிபரப்புக்கு மாறிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள்தெரிவித்தனர்.


மேலும், இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது அவர்கள் தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வேதனை தெரிவித்தனர். அரசின் செயல்பாடுகளால் தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் பயனடைந்து வருவதாக கூறிய அவர்கள், அரசு கேபிள் கட்டணத்திற்கும் தனியார் கேபிள் கட்டணத்திற்கும் 150 ரூபாய் வித்தியாசம் இருப்பதால் அரசு கேபிளைதான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அரசு சரியான ஒளிபரப்பு வழங்காததால் அவர்கள் மாற்று இணைப்பை நாடி செல்வதாகவும் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.



இதேபோன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த 20 க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவிகள், அரசு பேருந்து ஓட்டுநர்கள் தங்களை பேருந்தில் பயணம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பாதி வழியில் இறக்கி விடுவதாகவும் ஏனென்று கேள்வி கேட்டால் சைகைகள் மூலம் கேலி செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் புகார் தெரிவித்து முற்றுகையிட்டனர். 


இது தொடர்பாக சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் கூறுகையில், ”அண்ணா பூங்கா அருகே உள்ள அரசு மாணவியர் தங்கும் விடுதியில் தங்கி கலைக் கல்லூரியில் பயின்று வரும் நாங்கள் தினமும் காலை அண்ணா பூங்கா பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி செல்ல பேருந்துக்காக காத்திருப்போம். அப்போது அந்த வழியே வரும் அரசு பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் ஓட்டுநர்கள் பேருந்துகளை ஓட்டி செல்கிறார்கள். இதனால் பல கிலோமீட்டர் சுற்றி வந்து அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்று அரசு பேருந்தில் ஏறும் நிலை உள்ளது. அப்படி ஏறினாலும் எங்களை மிரட்டி கீழே இறங்க அரசு பேருந்து ஓட்டுநர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் சைகைகள் மூலம் கேலி செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். அதேபோல மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பும் போது கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் எந்த அரசு பேருந்தும் நிற்காததால் பல கிலோமீட்டர் நடந்து சென்று கோரிமேடு பகுதியில் அரசு பேருந்தில் ஏறுவோம். அப்போதும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் எங்களை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதனால் சரியான நேரத்திற்கு கல்லூரி சென்று படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும்” என்று தெரிவித்தனர்.