லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 19 ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு லியோ படத்தின் டிக்கெட் இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் லியோ படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கூடுதல் கட்டணத்திற்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட உள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் ரசிகர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் லியோ படம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரையிலான நாட்களில் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி 19.10.2023 முதல் 24.10.2023-ஆம் தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 01.30 மணி முதல் காலை 9.00 மணி வரை எந்த காட்சியும் திரையரங்குகளில் திரையிடக்கூடாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் வருவாய் கோட்டாட்சியர் 94450 00433 என்ற கைப்பேசி எண்ணிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00434 என்ற கைப்பேசி எண்ணிலும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் 94450 00436 என்ற கைப்பேசி எண்ணிலும், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00435 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகன நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.