சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்ன பையன் (52). இவர் வெள்ளாளபட்டியில் உள்ள தனது மகள் பிருந்தா என்பவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். சின்ன பையனுக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு வந்ததாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வெள்ளாளப்பட்டியில் சேகடிப்பட்டி சேர்ந்த பூபதி என்பவர் மருந்தகம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி சின்ன பையன் உடலில் அரிப்பு ஏற்பட்டதால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் பூபதி வெள்ளாளப்பட்டி பகுதியில் நடத்தி வரும் மருந்தகத்திற்கு சென்று மாத்திரை கேட்டுள்ளார். அப்போது மருந்தகம் நடத்தி வருபவர் ஊசி போட்டு உள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் சின்ன பையன் வெளியே வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். 



இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி மற்றும் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை பரிசோதித்த போது சின்ன பையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக பூபதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் சின்ன பையனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து சின்னப் பையனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருந்தகத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புச் செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தப்பி ஓடிய மருந்துக உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றன. மருந்தகத்தில் உரிமை இல்லாமல் ஊசி போட்டு ஒருவர் இருந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.