சேலம் மாநகர் முள்வாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சியில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் குறைந்தது ஒரு பூத்திருக்கு 25 பேராவது காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்களை அதிகம் கட்சியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகிகள் எடுக்க வேண்டும் என்றார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை எடுத்துக் கூறி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார். குறிப்பாக, நமது உறுப்பினர்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை பொது இடங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை பொறுத்தவரை முழுவதும் உள்ளது. கூட்டணி கட்சிகளால் நமக்கு லாபம், நம்மால் அவர்களுக்கு லாபம் உள்ளது என கூறினார். 



இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதேபோல் ஓசூரில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை பத்திரிக்கையின் வாயிலாக அறிந்தேன். இதுபோன்று ஒரு சில இடங்களில் நடப்பதை வைத்து ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை மதிப்பிடக்கூடாது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. சட்ட ஒழுங்கு சீராக உள்ளது. ஒரு சில இடங்களில் நடப்பதை நாங்கள் கண்டிக்கின்றோம். அதனை வரவேற்கவில்லை. தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக பணியாற்றி இதுபோன்ற காரியங்களை தடுத்த நிறுத்த வேண்டும். இதேபோன்று வழக்கறிஞர் கொலையிலும் தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். சில தனிப்பட்ட காரணங்களால் நடைபெறும் கொலைகளை வைத்து ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது எனது பார்வை என்றார்.


போதை பொருள் பயன்பாடு என்பது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளது. போதைப் பொருட்கள் அதிக அளவில் குஜராத் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது. குஜராத் மாநிலம் தான் நாடு முழுவதும் போதை பொருளை கொண்டு சேர்க்கும் கருவியாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.



கூட்டணி கட்சிகளுக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் தமிழகத்தில் தனி பெரும்பான்மையோடு திமுக ஆட்சியில் உள்ளது. கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே முடிவெடுக்க முடியும். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களிலும் அதேபோன்று சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார். 


அதானி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ராகுல் காந்தி தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் அதானி குறித்தும், அவன் நடத்தும் தொழில்கள் குறித்தும், மக்களுக்கு எதிரான பிஜேபி ஆட்சியை குறித்தும் விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தி சொல்வது உண்மை என்று நமது நாடு மட்டுமின்றி வெளிநாட்டு நீதிமன்றமே அவரை தண்டிக்கும் அளவிற்கு வந்துள்ளது. பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளபோது மக்கள் விரோத செயல்களை தடுக்க வேண்டும் என்று கூறினார்.