கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்குட்பட்ட சின்ன கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவர் இரண்டு கண் பார்வையும் இல்லாத பார்வை மாற்று திறனாளி. தொடர்ந்து  ஆதரவு இல்லாததால், மாற்றுத்திறனாளியான சின்னக்கண்ணு, பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

 

தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை தனது பையில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். மேலும் கிடைக்கும் சில்லரை ரூபாயினை, அவ்வப்போது மாற்றி, 500, 1000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பண மதிப்பிழப்பு செய்து, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, பார்வை மாற்று திறனாளிக்கு தெரியவில்லை. தொடர்ந்து தனது பையில் யாசகம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்தவர்கள் இந்த பணம் செல்லாது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு யாசகம் பெற்று பாதுகாத்து வந்த தன்னிடம் உள்ள இந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து கொண்டு செய்வதறியாது தவித்து வந்துள்ளார்.



 

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சின்னகண்ணு தன்னிடமுள்ள பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் 65 ஆயிரம் ரூபாயினை எடுத்து வந்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருமாறு மனு அளித்தார். அந்த மனுவில் பலவருடங்களாக யாசகம் பெற்று இந்தத் தொகையை சேமித்து வைத்திருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் போனதால் சேமித்து வைத்த தொகையை பத்திரமாக வைத்திருந்த இடத்தை மறந்து விட்டதாகவும், பார்வை மாற்று திறனாளி என்பதால், அரசு பண மதிப்பிழப்பு செய்தது தெரியவில்லை. அதனால் இந்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் போய்விட்டது. தற்பொழுது தான் இந்த நோட்டுகள் சேமித்து வைத்த இடம் தெரியவந்தது.  தற்போது இதை எடுத்து வந்துள்ளேன்.  இந்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள்,  65 ஆயிரத்தை  மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை அரசு பணமதிப்பு செய்தது அறியாமல், பார்வை மாற்றுத் திறனாளி சின்னக்கண்ணு 65,000 பணத்தை சேமித்து பாதுகாத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.