பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சிகள் வேண்டாம் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கம் கூறியுள்ளார்.


நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.



இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 19 ஆம் தேதி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகளை தமிழக பாஜகவினர் மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இன்றைய தினம் தாமரை மாநாட்ட திடல் தயார் பணிக்காக பூமி பூஜை போடும் பணிகள் நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜை போடும் விழாவில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ்விநாயகம், மாவட்ட தலைவர்கள் பாஜக முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கான திடலில் பிரம்மாண்டமான முறையில் மாநாடுத்திடல் மற்றும் புதிய ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்டப்பட்டு அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநாட்டு திடல் முழுவதும் ஜேசிபி வாகனம் மூலமாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் தொடர் வருகையால் தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு கூடுவதாகவும், பிரதமரின் வருகை குறித்து அரசியல் புரியாமல் முதலமைச்சர் ஏதேதோ உளறுகிறார் என சாடினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவில் அயலக அணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி பணத்தை சேர்த்து தேர்தலை சந்திக்கிறார் என குற்றம் சாட்டினார். பாஜக கட்சியை எல்லோரும் சாதாரணமாக கருதுகிறீர்கள். நாங்கள் யார் என்று தோழமைக் கட்சிகளுக்கு நிரூபிக்கும் நிலை உள்ளது. இவ்வளவு வேலைகளும் பாஜக நிர்வாகிகள் செய்யும் நிலையில், தோழமை கட்சியினர் எங்கள் கட்சியினர் கூட்டம் வந்தது என்று சொல்வதற்காகவா என கேள்வி எழுப்பினர். தோழமைக் கட்சியினரை தேர்தலில் வெற்றிபெற செய்வோம். பாஜக எந்த நிலையில் உள்ளது என்று நாட்டுக்கும், பாஜக தலைவருக்கும் தெரிய வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார். பாஜக தொண்டர்களின் உழைப்பு நாட்டிற்கு தெரியவேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். தோழமைக் கட்சியினரை மேடையில் அமர வைப்பது முக்கியமில்லை, பிரதமரை பார்க்கட்டும்.பொதுக் கூட்டங்களில் கூட்டணி கட்சிகள் வேண்டாம் தேர்தல் அறிவித்த பின்னர் தான் மற்றதெல்லாம் என்றும் பேசினார்.


தேர்தலுக்காகவே தமிழ்நாட்டில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் சொல்வதாகவும், தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமி இன்னேரம் பாஜகவுடன்தான் இருந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.