பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார் - கே.பி.ராமலிங்கம்
மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவாவது கையெழுத்து இயக்கத்தை தடுக்கக் கூடாது என சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள பாஜக கல்வி பிரிவு அலுவலகத்தில் அக்கட்சியில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் என ஒரு அரசை வலியுறுத்தும் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை இந்த தேசம் இதுவரை பார்த்ததில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட கையாலாகாத தனத்தால் அரசை வழிநடத்த தெரியாமல் ஏராளமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளது. இதனை திசை திருப்பவே மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 1965இல் நடந்தது போல தற்போதும் இந்தியை திணிக்க முற்படுவதாக அவர் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து வருகிறார். மும்மொழிக் கொள்கையின் மூன்றாவது மொழி இந்தி அல்ல, மாணவர்களின் விருப்ப மொழி என்ற அவர், 1967-இல் திமுக ஆட்சியில் அமர்ந்ததற்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணம் இல்லை. எம்ஜிஆர் சுடப்பட்டதை மட்டுமே வைத்து திமுக ஆட்சி பிடித்தது என குறிப்பிட்டார்.
மும்மொழி கொள்கை என்பது திமுகவிற்கு கசக்கும் - மக்களுக்கு இனிக்கும் என்ற கே.பி.ராமலிங்கம் தற்போது நடைபெற உள்ள கையெழுத்து இயக்கம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
அரசியல் லாபத்திற்காக கூட்டணியில் உள்ளவர்களே மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறார்கள். மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இதனால் பயப்படுகிறார்கள். பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார். மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவாவது கையெழுத்து இயக்கத்தை தடுக்கக் கூடாது. அதை விட்டுவிட்டு கையிடத்தை இயக்கம் நடத்திய தமிழிசையை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்ட எந்த மாநிலமும் சீரழியவில்லை. மும்மொழிக் கொள்கையில் தாய்மொழி கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் தனது தாய் மொழியை கட்டாய பாடமாக படிக்க எழுத கற்றுக் கொள்வார்கள். பீகார் முன்னேற்றத்தை பார்க்காமல் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குறிப்பிட்டார்.
நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கூட்டு நடவடிக்கை குழுவில் தென் மாநில முதல்வர்களை இணைப்பதற்கு முன் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தியை முடிந்தால் இணைக்கட்டும். மும்மொழி கொள்கைக்கு எதிராக ராகுல் காந்தி பேசுவாரா? என கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.