சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டம். இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, ”புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலகல்வியை கொண்டு வரவும், வட மாநிலத்தை போன்று தமிழகத்திலும் மத கலவரத்தை ஏற்படுத்திட நினைப்பவர்களின் முகத்திரையை கிழிக்கும் நிகழ்ச்சியாக இந்த கூட்டம் அமைந்து உள்ளது” என்றார்.



திராவிட மாடல் என்பதனை உலகத்திற்கே வெளிப்படுத்திய தமிழக முதல்வர் நாடு போற்றும் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று பேசிய அவர், பெரியாரின் கனவினை நனைவாக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி உள்ளார் என்றார். பாஜகவினர் இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்றும் கூட்டணியை கலைத்து விடலாம் என்று காவிகூட்டம் எண்ணி வருகிறது. அது ஒரு போதும் நடக்காது என்று கூறிய அவர் 1972 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் மாநாடு நடத்தினார். அப்போது பாஜக என்ற ஒரு கட்சியே இல்லை என்று பேசிய அவர், கருப்புகொடி காட்டுவது ஜனநாயக உரிமை என்றும் அன்று பெரியாருக்கு ஜனசக்தியை சேர்ந்தவர்கள், கருப்புகொடி காட்டியதை மிக மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் திமுக அதிகளவில் வெற்றி பெற்றது” என்றார்.



இந்த மண்ணில் காவிக்கு இடம் இல்லை, பிரதமராக வருவதற்கு முன்பாக மோடி கொடுத்த வாக்குறுதியை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்றினாரா என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக முதல்வர் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார். இந்திய வரலாற்றில் நரிக்குறவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் உணவு அருந்திய முதல்வரின் செயல்பாடு தான் திராவிட மாடல் ஆட்சி. குலகல்வியை கொண்டு வருவதற்கே நீட்தேர்வை கொண்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் வகையில் இன்றைய காலகட்டம் வந்துள்ளது. மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று இருந்த நிலையை அப்போதே தடுத்து நிறுத்தியது திராவிட கட்சிகள் என்றும், தற்போது காவி கூட்டம் பல வண்ணத்தில் இங்கே பலவற்றை திணிக்க பார்க்கிறார்கள் அதனை நாம் எதிர்க்க வேண்டும் என்றார்.


ஒழிக்கப்பட்ட குல கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதே புதிய கல்விக் கொள்கை என்று விளக்கம் அளித்த அவர், ”அனைத்தையும் அனைவருக்கும் கொடுப்பதே திராவிட மாடல், மனுதர்மத்தை மட்டும் கொடுப்பவர்கள் காவி கூட்டம், திராவிட மாடலை கொடுத்து கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். இந்தியை திணிக்கும் முயற்சியை எதிர்க்கும் போராட்டம் மொழி உரிமைக்கான போராக மாற வேண்டும் என்றார். பிரச்சார பயணம் 25 ஆம் தேதி முடிந்தவுடன் அடுத்த பணியாக எழும்பூர் ரயில் நிலையம் முன்பு இந்தி எழுத்தை அழிக்கும் முயற்சியில் இளைஞர்களோடு சேர்ந்து செய்திட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.


நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் உரிய ஆதாரத்தோடு தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது, என்றும் ஆளுநர் போட்டி அரசியல் நடத்தி வருகிறார் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்களை பிரதமரால் நியமனம் செய்யப்பட்டவர் நிராகரிப்பது தவறானது என்றார். நீட் தேர்வு என்பது அரசியல் கட்சி பிரச்சனை அல்ல. எதிர்கால மாணவர்களின் வாழ்க்கை பிரச்சனை என்றும் பொதுமக்களின் அக்கறை உள்ளவர்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்திட வேண்டும்” என்று பேசினார்.