வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நூதனமாக வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக யாரேனும் காட்டிற்குள் சென்று வங்கா நரியை பிடித்து வந்தால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர். இதில் சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கூலமேடு, தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழப்பாடி பகுதியில் உள்ள கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர், தமையனூர், சின்னகிருஷ்ணாபுரம், வடுகத்தம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூதன முறையில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தி, கோயிலில் பொங்கலிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். காட்டிற்கு சென்று வங்கா நரியை பிடித்து வந்து ஊர் கோயிலில் வைத்து வழி பட்டு, பிறகு தெருக்களில் ஓடவிட்டு விரட்டி வந்தால் நோய் நொடி இன்றி மக்கள் வாழலாம் என ஐதிகம் கொண்டுள்ளனர். ஆனால், வங்கா நரியை பிடிப்பது குற்றச்செயல் என வனத்துறை அறிவித்துள்ளது.
வனத்துறையின் தடை உத்தரவை மீறி வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் வங்கா நரி பிடிப்பதை தடுக்க சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்களில், மக்களிடம் எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். அழிந்து வரும் அரிய வன விலங்குகள் பட்டியலில் வங்கா நரி இருக்கிறது. அதனால் வங்கா நரியை பிடித்து வருவதும், அதனை கயிற்றில் கட்டி ஓடவிட்டு, துன்புறுத்துவதும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பெரும் குற்றச் செயலாகும். இதனால் தான், வங்கா நரியை பிடிப்பது குற்றம் என வனத்துறை அறிவித்து வாழப்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான வன அதிகாரிகள், கொட்டவாடி, சின்னமன்பாளைய நாயக்கன்பாளையம், ரங்கனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். பொங்கல் நெருங்கி வரும் நிலையில், நாளை (9 ஆம் தேதி) முதல் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வரும் 13 ஆம் தேதி முதல் வாழப்பாடியை சுற்றியுள்ள கிராமங்களிலும், கல்வராயன் மலை, இதர கரடுகளில் 60 வன ஊழியர்கள் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரியை பிடித்து வழிபடும் திருவிழா நடத்துவதும், வன விலங்கு துன்புறுத்தப்படுவதும் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி குற்றச்செயல். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும். ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அதனால், யாரும் வங்கா நரியை பிடித்து வரக்கூடாது. மீறி செயல்பட்டால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது" என்றனர்.