சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை ஆர்டிஓ வாசிக்க மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் சினம் கொண்டு அடக்கி வருகின்றனர். இதனை கண்டு ரசிக்க சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் யாரேனும் காயமடைந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சுகாதார துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து போட்டியில் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.